கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவரின் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு


சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரின் பதவி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு ஏப்.21-க்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலி்ங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலரும், மண்டலத் தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரும், 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கடந்த மார்ச் 27-ல் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவரான ஜெயபிரதீப், ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பாபு, கே.பி.சொக்கலிங்கம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் சகுந்தலா ஆகியோரும் தங்களது பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில், ‘‘முழுமையான விசாரணை நடத்தாமல் எங்களை பதவி நீக்கம் செய்து பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது. அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு அளித்த பதிலில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ள கருத்துருக்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை’’ என வாதிடப்பட்டது

இதேபோல உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் தரப்பில், ‘‘நகராட்சி தலைவர் பதவியில் இருந்தும், கவுன்சிலர் பதவியில் இருந்தும் என்னை நீக்கியுள்ளனர். முதலில், நகராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாக குறிப்பிட்ட அரசு, அந்த உத்தரவில் கவுன்சிலர் பதவி நீக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது’’ என வாதிடப்பட்டது.

விசாரணையின்போது, உத்தரவில் நிறைய முரண்பாடுகள் உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ஏப்.21-க்குள் விரிவான பதில் அளிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்.21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

x