சோழபுரம் - தஞ்சாவூர் 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்: முக்கியத்துவம் என்ன?


படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சோழபுரம்-தஞ்சாவூர் 4 வழிச்சாலையை நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 2018ல் தொடங்கியது. இதில், தஞ்சாவூர்- சோழபுரம் வரை 47.84 கி.மீ, சோழபுரம்- சேத்தியாதோப்பு வரை 50.48 கி.மீ, சேத்தியாதோப்பு- விக்கிரவாண்டி வரை 65.96 கி.மீ என 3 பிரிவுகளாக மொத்தம் 164.28 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெற்றன.

இதில், தஞ்சாவூர் முதல் சேத்தியாதோப்பு வரையிலான சாலை பணிகள் நிறைவுற்றதை அடுத்து, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 2024, செப்.13ம் தேதி கும்பகோணத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஜன.24-ம் தேதி முதல் சோழபுரம்-தஞ்சாவூர் வரையிலான சாலையில் வாகனங்களின் இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சோழபுரம்-தஞ்சாவூர் பகுதி 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியையொட்டி, தஞ்சாவூரில் 4 வழிச்சாலை தொடங்கும் பகுதியில் சாலையில் தென்னை ஒலையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. அதில், வெல்கம் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேம்புக்குடி சுங்கச்சாவடியில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

x