வக்பு சொத்துக்களை சில தனிநபர்களே அனுபவிக்கிறார்கள்; சட்டத் திருத்தம் அவசியம் - ஷேக்தாவூத் வலியுறுத்தல்


ஷேக்தாவூத்

வேலூர்: வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்தார்.

தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ”வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய மக்களுக்கும், சமுதாயத்துக்கும் தீமை ஏற்படும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு இது தேவை என வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவதாக அதிக சொத்துக்கள் வக்பு வாரியத்திடம் உள்ளது. ஏறக்குறைய 9 லட்சம் ஏக்கர் அல்லது ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், எது உண்மை என்பதை கண்டறிவதற்கு இந்த சட்ட மசோதா அவசியம் தேவை.

வக்பு சொத்து வருமானத்தை இந்தியா முழுவதும் 200-ல் இருந்து 300 பேர் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்கு இந்த வருமானம் சென்றடையவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. வக்பு சொத்தின் மூலம் எத்தனை பேர் கல்வியில் உயர்ந்தார்கள், எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். உண்மையில், வக்பு வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட வில்லை. இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறது.

இந்த மசோதாவில் இரண்டு பெண்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பதர்சயீத் என்பவரை வக்பு வாரிய தலைவராக நியமித்தார். எனவே, இந்தியாவில் தமிழகம் முன் மாதிரியாக அப்போதே திகழ்ந்தது.

வக்பு வாரிய சொத்துக்களை சில தனிநபர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அந்த சொத்தை திரும்பப் பெற வேண்டும். மேலும் வக்பு வாரியத்தில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.

x