புதுச்சேரி: குழாய் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட உள்ள இயற்கை எரிவாயுக்கான வரியை 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க, ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் வீடுகள் மற்றும் வணிகம், தொழிற்சாலை பயன்பாட்டுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் வகையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் (PNGRB) தேர்வு செய்யப்பட்டுள்ள சில நிறுவனங்கள் மூலம் வலையமைப்பு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிவடைந்து, இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் வணிக வரித் துறை கூடுதல் செயலர் முகமது மன்சூர் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2007 பிரிவு 31 மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தியும், பொதுமக்கள் நலன் கருதியும் , வீட்டு உபயோகத்துக்காக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுக்கான வரியை குறைக்க புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி வீட்டு உபயோகத்துக்காக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு மீதான வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். வணிக பயன்பாட்டுக்கான இயற்கை எரிவாயு மீதான வரி 14.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கு 14.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையும் வரி குறைக்கப் படும். இது ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.