கோவை: தமிழகத்தின் தினசரி மின் தேவை 372 மில்லின் யூனிட்களாக உயர்ந்துள்ளதாகவும், தேவையை பூர்த்தி செய்ய 50 சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு உதவி வருவதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சில இடங்களில் மழை பெய்த போதும், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தமிழகத்தின் மொத்த மின் தேவை 372.38 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய மின் தொகுப்பில் இருந்து 252.40 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப் கூறியதாவது: கோடை காலம் என்பதால் தமிழகத்தில் தினசரி மின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மொத்த மின் தேவை 372.38 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. இருப்பு 374.39 மில்லியன் யூனிட்டாகும். இதில் மத்திய கிரிட் 252.40 மில்லியன் யூனிட், அனல்மின் நிலையம் 57.40, ஹைட்ரோ( நீர் மின்உற்பத்தி) 5.41, எரிவாயு 3.36, காற்றாலை 4.35, சூரியஒளி 35.60, பையோ காஸ் 13.87 மில்லியன் யூனிட்களாக பங்களித்துள்ளன.
ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தின் மொத்த மின்தேவை 366.36 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இருப்பு 370.31 யூனிட்களாக காணப்பட்டது. தினசரி மின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய கிரிட் 50 சதவீதத்திற்கும் மேல் தொடர்ந்து பங்களித்து வருகிறது. தமிழகத்தில் சூரியஒளி, காற்றாலை போன்ற மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.
எதிர்கால தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும். தனித் தனியாக உள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக மாற்றி அனைத்து பிரிவுகளிலும் மின் உற்பத்தி கட்டமைப்பு அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.