அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்: நாராயணசாமி புகார்


புதுச்சேரி: ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவரை அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ள சூழலில், அந்த இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்று டிஜிபியிடம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், புதுச்சேரி நோணாங்குப்பம் டோல் கேட்டில் மது போதையில் 3 பேர் ரகளையில் ஈடுபட்ட தாக சர்ச்சை எழுந்தது. அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநிலத் தலைவர் அமுதரசன் என்பவர், அவர்களுக்கு ஆதரவாக அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு சென்று கேள்வி எழுப்பினார். அப்போது இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 1ம் தேதி, புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில், அரியாங்குப்பம்காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் கஞ்சா, பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நாராயணசாமி செயல்படுகிறார் என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார். இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர், முதல்வரிடம் தான் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.

டிஜிபியிடம் மனு: இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸார் டிஜிபி ஷாலினி சிங்கை நேற்று சந்தித்து, இப்பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ‘நோணாங்குப்பம் படகு குழாம் அருகே கைதான மூவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி அரியாங்குப்பம் காவல்நிலையம் சென்ற ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் மாநிலத் தலைவர் அமுதரசனை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தாக்கியுள்ளார். இதற்கான ஆதாரம் காவல்நிலைய சிசிடிவியில் உள்ளது. அதன்பிறகு அமுதரசன் அடுத்தநாள்தான் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் மனித உரிமையை மீறியுள்ளார். இப்படி இருந்தால் மக்கள் காவல்நிலையம் வர அஞ்சுவார்கள்.

எனவே அமுதரசன் தந்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கலையரசன் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். அதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘பேரவைத் தலைவருக்கு நாவடக்கம் தேவை’: டிஜிபியிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை பேரவைத் தலைவர் திரித்து கூறியுள்ளார். நாங்கள் எங்கள் கட்சித் தொண்டர் தாக்கப்பட்டதற்காக போராட்டம் நடத்தினோம். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை; குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் செயல்படவில்லை.

சட்டப்பேரவைத் தலைவருக்கு நாவடக்கம் தேவை. போராட்டத்தை திசை திருப்பும் முயற்சிகளில் பேரவைத் தலைவர் ஈடுபட வேண்டாம். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகள்தான் கொலை குற்றவாளிகள், நில அபகரிப்பாளர்கள், சிறை கைதிகள் ஆகியோருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். காரைக்கால் பெண் தாதாவை, பாஜகதான் அவர்களுடைய கட்சியில் சேர்த்தது" என்று தெரிவித்தார்.

x