ஊராட்சிகளில் கட்டிடம் கட்ட சுயசான்று அடிப்படையில் உடனடி அனுமதி: கோவை ஆட்சியர் அறிவிப்பு 


கோவை: ஊராட்சி பகுதிகளில் 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் கட்டுவதற்கு ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றின் அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உடனடி அனுமதி வழங்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''கோவை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு ஊரக பகுதிகளில் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில் 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் கட்டுவதற்கு ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றின் அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உடனடி அனுமதி வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குடியிருப்பு கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துதல். கட்டிட அனுமதியை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்த்தல். கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை செலுத்துவதை எளிமையாக்குதல், கட்டிட அனுமதியை பெறுவதில் இடைத்தரகர்களை தவிர்த்தல் மற்றும் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து அனுமதி பெறுதல் ஆகியவை சுயசான்று நடைமுறையின் பயன்களாகும்.

பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிடப்பட்ட திட்ட வரைபடம், விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணம், தளபுகைப்படம் ஆகிய ஆவணங்கள் கொண்டிருத்தல் அவசியம். இந்த சுயசான்று நடைமுறையை பயன்படுத்தி மக்கள் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் செய்து பயன் பெறலாம்.' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x