தனியார் உரக்கடைகள் பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு எச்சரிக்கை


திருப்பூர்: தனியார் உரக்கடைகளில் பரிந்துரைக்கப்படும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் என வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம் சுற்றுவட்டாரத்தில் பரவலாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குலை நோய் பரவல் காரணமாக விளைச்சல் பாதித்ததால், விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நெல் விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இது குறித்து ஆட்சியர் உத்தரவின் பேரில், வேளாண் துறை சார்பில் வயலாய்வு மேற்கொள்ளப் பட்டது.

அதன்பின், வேளாண் இணை இயக்குநர் க.சுந்தர வடிவேல் கூறியதாவது: பாதிக்கப்பட்ட நிலத்தில் பயிர் மேலாண்மை செய்யவும், கோடை உழவு செய்யவும், பயிர் சுழற்சி மேற்கொள்ளவும், மண்ணின் அங்கக கரிமசத்தை அதிகரிக்க தக்கை பூண்டு, சணப்பை போன்ற பசுந்தாள் உரத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலரை தொடர்பு கொண்ட பின்னரே பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். தனியார் உரக்கடைகளில் பரிந்துரைக்கப்படும் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தக் கூடாது.

தற்போது நெற்பயிரில் காணப்படும் குலை நோயை கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு ட்ரைசைக்லசோல் 75 சதவீதம் டபுள்யூபி 120 கிராம் என்ற வீதத்தில் தெளிக்க வேண்டும். விதைகளை டி.விரிடி சூடோமோனாஸ்-கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். வயலில் களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். மேலும் நெற்பயிரில் தழைச்சத்து உரங்களை மண்ணின் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும், என்றார். ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநர் ம.தேவி உடனிருந்தார்.

x