தூத்துக்குடி: ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் மதுக்கடையோ, மதுபானக் கூடமோ அமைக்க கூடாது என வலியுறுத்தி அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுநல அமைப்பினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆறுமுகநேரி சர்வ கட்சி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.ராமசாமி தலைமையில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் நலப்பிரிவை சேர்ந்தவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு விபரம்:
சுதந்திரப் போராட்ட தியாகிகள் 33 பேர் பிறந்த ஊர் ஆறுமுகநேரி. இங்கு கடந்த 8 ஆண்டுகளாக மதுபானக் கடை இல்லை. ஏற்கெனவே இருந்த மதுபானக் கடையும் பொதுமக்களின் போராட்டத்தின் காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆறுமுகநேரி பகுதியில் அரசு மகளிர் பள்ளி அருகே உள்ளிட்ட 5 இடங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக அறிகிறோம். இதனை கண்டிக்கும் விதமாக கடந்த 26.03.2025 அன்று சர்வ கட்சிக் கூட்டம் நடத்தி ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்.
தியாக மற்றும் ஆன்மிக பூமியான ஆறுமுகநேரியில் மதுக் கடைகளோ, மதுபானக் கூடமோ அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு அமைக்க முயற்சி செய்தால் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.