பெரம்பலூர்: விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்காததால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் உள்ள பாடாலூர், இரூர், பொம்மனம்பாடி, சத்திரமனை, வேலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம், அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இதை ஓராண்டு வரை பட்டறைகளில் இருப்பு வைக்க முடியும். இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தவரும் இந்த வெங்காயத்தை விதைக்காக வாங்கிச் செல்கின்றனர்.
இதுபோன்ற தனித்துவமிக்க செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு பெற 2022-ம் ஆண்டு மாவட்டத் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன்படி, செட்டிக்குளம் பகுதி விவசாயிகளைக் கொண்டு குழு அமைத்து, செட்டிக்குளம் சின்ன வெங்காயத்தின் தரச் சான்றிதழுடன் புவிசார் குறியீடு கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தனர்.
அதன்படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெங்காயத்தின் சாகுபடி பரப்பளவு, விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்தின் அளவு உள்ளிட்ட தகவல்களை மாவட்ட வேளாண் விற்பனை துறையினர் அளித்திருந்தனர். அதன் பிறகு அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு இன்னும் புவிசார் குறியீடு வழங்கப்படாததால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதனிடையே, செட்டிக்குளம் பகுதியில் விளைந்த சின்ன வெங்காயத்தின் சாம்பிள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக மாநில வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், விரைவில் புவிசார் குறியீடு கிடைத்துவிடும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் பெரம்பலூர் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினர்.