வைகை, பல்லவன் ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பொதுப்பெட்டி இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி


ரயில் பயணிகளின் வசதிக்கென மதுரை - சென்னை - மதுரை வைகை மற்றும் காரைக்குடி - சென்னை - காரைக்குடி பல்லவன் பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பொது இருக்கை பெட்டி இணைக்கப்படும். அது போன்று காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606), சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவற்றிலும் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பொது இருக்கை வசதி கொண்ட கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.

இதற்காக இந்த ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த ரயில்கள் இனி 3 குளிர் சாதன இருக்கை வசதி பெட்டிகள், 12 முன்பதிவுள்ள 2-ம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும் என கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x