சென்னை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் உள்ளிட்ட 100 கோயில்களில் புதிதாக ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சைவமும், வைணவமும், ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள், ஆழ்வார்களின் திருவரலாறு, இந்து மதம், பொருட்டமிழ் வேதம், பொற்றாமரை, ஊரும் பேரும், பாகவத புராணம், நால்வர் பிள்ளை தமிழ் என 300 வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பக்தர்கள் பார்வையிடுவதுடன், ஆர்வமுடன் வாங்கியும் செல்கின்றனர். இதன் மூலம் மாதந்தோறும் லட்சக் கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
இந்த புத்தக விற்பனை நிலையங்களுக்கு வரவேற்பு இருப்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் கொடைக் கானல் குறிஞ்சியாண்டவர் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளிட்ட 100 கோயில்களில் விற்பனை நிலையங்களை திறக்க, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, கொடைக்கானலில் புதிதாகவும், பழநி மலைக்கோயிலில் கூடுதலாகவும் ஒரு புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.