மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் சேறு, சகதி-க்கு எப்போது தீர்வு?


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து கொடுக்காததால் சிறு மழை பெய்தாலே சேறும், சகதியுமாக மாறி வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், வியாபாரிகளே தூய்மைப்பணியாளர்களாக மாறி அன்றாட தூய்மைப்பணி மேற்கொள்கிறார்கள்.

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. நாடு முழுவதும் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மொத்தம் 2 ஆயிரம் கடைகள் உள்ளன. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது 1300 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. சுமார் 2,000 சரக்கு வாகனங்கள் அன்றாடம் காய்கறிகளை கொண்டு வந்து இறக்கி செல்கின்றன. காய்கறிகள் வாங்குவதற்கு சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மார்க்கெட்டிற்கு வந்து செல்கிறார்கள்.

ஆனால், மாநகராட்சியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியில்லை. கடந்த 2010-ம் ஆண்டு கடைசியாக சாலை போடப்பட்டது. இந்த சாலைகள் சிதைந்து, மழை பெய்தாலே சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மழைநீர் வெளியேறுவதற்கு வசதியில்லாததால் மழை பெய்தால் கடைகள் முன் சேறும் சகதியுடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

காய்கறிகளை வியாபாரிகள், இந்த சகதிக்கு மத்தியில் விற்க வேண்டிய உள்ளது. மார்க்கெட்டில் உள்ள தெருவிளக்குகளை மாநகராட்சி பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இதுபோல் மின்கசிவு ஏற்பட்டு ஒரு கன்று குட்டி உயிரிழந்துள்ளதாக வியாபாரிகள் மாநகராட்சியில் புகார் செய்தனர். நேற்று பணியாளர்கள் வந்து தெருவிளக்குகளை பராமரிப்பு செய்தனர்.

இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமபை்பு சங்கத்தலைவர் சின்னமாயன் கூறுகையில், "மாநகராட்சி அதிகாரிகள் கடைகள் வாடகையை மட்டும் வசூல் செய்கின்றனர். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன் வருவதில்லை. தன்னார்வ நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நிதியளிப்பு செய்து சாலை அமைத்து தர தயாராக இருந்தும், மாநகராட்சி அதற்கு அனுமதி மறுக்கிறது.

அருகில் உள்ள கே.கே.நகர் சுந்தரம் பார்க் பொழுதுப்போக்கு பூங்காவை மேம்படுத்துவதற்கு மாநகராட்சி ரூ.50 கோடி நிதி பெற்று சீரமைக்கிறது. ஆனால், அடித்தட்டு வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் மாநகராட்சிக்கு வருவாய் தரக்கூடிய மார்க்கெட்டை சீரமைத்து தர அதிகாரிகளுக்கு மனமில்லை. நேற்று முன்தினம் பெய்த மழையில் மார்க்கெட் சுகாதாரசீர்கேடாகி கொசு தொல்லையும், தூர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி பணியாளர்கள் சேறும், சகதியையும் சீரமைக்க வராததால் வியாபாரிகளே தூய்மைப்பணியாளர்களாக மாறி அன்றாடம் தூய்மைப்பணி மேற்கொள்கிறார்கள்" என்றனர்.

x