[X] Close

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தொல். திருமாவளவன் கருத்து 


thirumavalavan-speech

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 10:51 am
  • அ+ அ-

 திருவண்ணாமலை 

சர்வதிகாரப் போக்குடன் செயல்படும் பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 'தேசம் காப்போம்' மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தையின் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறும்போது, “தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலை கிராமத்தில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காயச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரை பணியில் ஈடுபடுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இது அவருக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை வலைக்கலாம் என்ற சர்வதிகாரப் போக்கிற்கு, ஜனநாயகம் உரிய நேரத்தில் பாடம் புகட்டும் என்பதற்கு இது சான்றாகும்.

இதேபோல், இந்தியாவில் பிரதமர் மோடி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பண மதிப்பு நீக்கம் செய்து, சட்டம் மற்றும் பொருளாதார வல்லுநர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டார். மோடிக்கும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close