தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் ஊராட்சி பருத்தியூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையம் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.08 லட்சத்தில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இம்மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவதற்குள்ளேயே சுவர்களில் முழுமையாக விரிசல் ஏற்பட்டது. கதவின் ஒரு பகுதி கழன்றுவிட்டது. மேலும் மாடியில் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியுடன் கூடிய குழாயை முழுமையாக இணைக்காமல் பாதியில் விட்டுள்ளனர். இதனால், தண்ணீர் வசதியின்றி கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் இல்லாததால், குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து தினமும் குடிநீரை கொண்டு வர வேண்டியுள்ளது. சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த் கூறுகையில்,'அங்கன்வாடி மையத்தை தரமின்றி கட்டியதால் சில மாதங்களிலேயே சேதமடைந்து விட்டது. மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.