குலதெய்வ கோயிலில் தேனீக்கள் கொட்டி தொழிலாளி உயிரிழப்பு: குடியாத்தம் அருகே சோகம்


குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் வெல்டிங் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர்.

குடியாத்தம் அடுத்த சின்னபரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). வெல்டிங் தொழிலாளியான இவர், நேற்று தனது குடும்பத்துடன், அதே பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள குலதெய்வ கோயிலான கன்னி கோயிலுக்குச் சுவாமி கும்பிட சென்றார். இவருடன் சேர்த்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

இதையடுத்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்து சாம்பிராணி புகை காண்பிக்கப்பட்டது. அப்போது, அதிலிருந்து எழுந்த புகை அருகேயுள்ள மரத்தில் கட்டி இருந்த தேன் கூட்டில் பட்டதால் அங்கிருந்த தேனீக்கள் கிளம்பி கோயிலில் சுவாமி கும்பிட வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டியது. இதில், செந்தில்குமாரை அதிக தேனீக்கள் கொட்டியதால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே செந்தில் குமார் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக்கேட்டதும், அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும், தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அதிக காயமடைந்த வனஜா, விசாலாட்சி, அஞ்சலி ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

லேசான காயமடைந்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, ராமலிங்கம் பள்ளி கொண்டாவைச் சேர்ந்த லோகேஸ்வரி, காவியா, பெங்களூருவைச் சேர்ந்த ரஞ்சித், பிரவீன், தீக்ஷிதா ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சுவாமி கும்பிட சென்ற இடத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

x