தாளவாடியில் தக்காளி கிலோ ரூ.3-க்கு கொள்முதல்; விலை சரிவால் விவசாயிகள் வேதனை


ஈரோடு: தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம் , பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

இதில் தக்காளி மட்டும் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலையில், தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால், தக்காளியை வாங்க வரும் வியாபாரிகள், கிலோ ரூ 3 முதல் ரூ.4 வரை விலை வைத்து கொள்முதல் செய்ய கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாளவாடி சுற்றுவட்டார விவசாயிகள் கூறியதாவது: தக்காளி நடவு, களை எடுத்தல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து என ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் செலவாகிறது. 3 மாத பயிரான தக்காளி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 வரை விலை வைத்து வியாபாரிகள் கொள் முதல் செய்தனர். ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாக கூறும் வியாபாரிகள், தக்காளிக்கு கிலோ ரூ.3 முதல் ரூ.4 வரை மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்கின்றனர்.

இந்த விலைக்கு விற்பனை செய்தால், நாங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டி வரும். தக்காளியை பறிக்க கொடுக்க கூலி கொடுக்கக் கூட இந்த தொகை கட்டுப்படி ஆகாது. இந்த விலை வீழ்ச்சியால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி மட்டுமல்லாது கத்திரிக்காய், காலிபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால், கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட வேளாண்மைத் துறையினர் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, மொத்தமாக கொள்முதல் செய்து நகர்ப்பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

x