பரோட்டா, சிக்கன் குழம்பு சாப்பிட்ட இளைஞர் மரணம்; தாய்க்கு தீவிர சிகிச்சை - திருப்பத்தூர் அதிர்ச்சி


திருப்பத்தூர்: பரோட்டா சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களின் மகன் பாலாஜி (25). இவர், பொறியியல் முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.

வெங்கடேசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் ராஜேஸ்வரியும், பாலாஜியும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி ராஜேஸ்வரி, பாலாஜி தங்களது வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு சென்றனர். அங்கு, பொருட்களை வாங்கி கொண்டு மகனூர்பட்டி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பரோட்டா மற்றும் சிக்கன் குழம்பை பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் ராஜேஸ்வரி, பாலாஜி ஆகியோருக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை, உறவினர்கள் முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருவரும் மாற்றப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாலாஜி உயிரிழந்தார். ராஜேஸ்வரி தொடர் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பாலாஜி பரோட்டா சாப்பிட்டு தான் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

x