கரூர்: குளித்தலையில் ரூ.2.51 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
தரை தளம் 268.04 ச.மீ. பரப்பளவு, முதல் தளம் 239.95 ச.மீ. பரப்பளவு என மொத்தம் 507.99 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
இதையொட்டி, குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட பதிவாளர்கள் குமார், அருள் ஜோதி (தணிக்கை), சார் பதிவாளர் ஸ்ருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.1.9 கோடியில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி, சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எம்.அருணா, கோட்டாட்சியர் அக்பர் அலி, மாவட்ட பதிவாளர் கு.சுசிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.