கடலூர்: வீட்டு வரி செலுத்தாதவரின், வீட்டு வாசலில் மாநகராட்சி ஊழியர்கள் பெரிய பள்ளம் தோண்டி, குடியிருப்பு வாசிக்கு மாநகராட்டி நிர்வாகத்தினர் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
கடலூர் மாநகராட்சிக்கு சேர வேண்டிய வரி நிலுவையை வசூலிக்க, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. கடலூர் இம்பிரியல் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு நேற்று முன்தினம் குப்பை வாகனத்தை நிறுத்தி விட்டு, வரி கொடுத்தால் மட்டுமே குப்பை வாகனம் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். இது சர்ச்சையை கிளப்பியது.
கடலூர் வரதராஜன் நகரில் உள்ள ஒரு வீட்டில் ரூ. 42 ஆயிரம் வீட்டு சொத்து வரி நிலுவை உள்ளது. அந்த வீட்டில் கடந்த ஐந்தாண்டு காலமாக வசிக்கும் செந்தில் குமார் என்பவர், “நான், வாடகைக்கு இருந்து வருகிறேன். வாடகை பணத்தை உரிமையாளருக்கு செலுத்தி விட்ட நிலையில், வீட்டு உரிமையாளரே வரியை செலுத்த வேண்டும். நீங்கள் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
ஆனாலும் மாநகராட்சி ஊழியர்கள் அவர் சொல்வதைக் கேட்காமல், ஜேசிபி இயந்திரத்தை வர வைத்து செந்தில்குமார் குடியிருக்கும் வீட்டின் முன்பு பெரிய பள்ளத்தை தோண்டியுள்ளனர். இந்த திடீர் பள்ளத்தால் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டது.
உடனே செந்தில் குமார், கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் இது குறித்து தகவல் தெரிவித் துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ”வீட்டு உரிமையாளரிடம்தான் வரி வசூலிக்க வேண்டும் என்று எடுத்துரைத்து, நிலைமையை விளக்கிய பின்னரும் மனித உரிமையை மீறும் வகையில், இப்படி வீட்டுக்கு முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி நிர்வாகம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.