கடலூர்: பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியாநல்லூர், கொத்தட்டை, பெரியகுமட்டி உள்ளிட்ட இடங்களில் சவடு மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
அரசின் விதிகளை மீறி, இங்கு அதிகமான ஆழத்தில் சவுடு மணல்களை வெட்டி எடுப்பதால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இந்த மணல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புவனகிரி வட்டாட்சியர், மாவட்ட கனிம வளத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் ரமேஷ் (33) என்ற இளைஞர், கொத்தட்டை பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். கையில் பெட்ரோல் கேனும் வைத்திருந்தார். மணல் குவாரிகளை மூடாத நிலையில், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி இளைஞர் முழக்கம் எழுப்ப, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுச்சத்திரம் போலீஸார், ஒலிபெருக்கி மூலம் மணல் குவாரியை மூடுவதாக அந்த இளைஞரிடம் உறுதி அளித்தனர். அதன் பின் அவர் கீழே இறங்கினார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.