தேனி: பெரியகுளம் அருகே உள்ள மலையடிவாரத்தில் அடுத்தடுத்து 5 ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து, அப்பகுதியிலேயே சிறுத்தை சுற்றிக்கொண்டிருப்பதால், தனியே யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, விவசாய நிலங்களில் ஆங்காங்கே கிடை அமைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அட்டணம் பட்டியில் இருந்து காமக்காபட்டி செல்லும் சாலையில் கருப்பசாமி கோயிலுக்கு அருகே உள்ள தோட்டத்தில் கிடை அமைத்திருந்தார். தினமும் காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்று விட்டு, மாலையில் தோட்டத்தில் அடைத்து வைப்பது வழக்கம்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு கிடையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை காணவில்லை. ஆட்டின் ரத்தம் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. காவலுக்கு இருந்த ஜெயக்குமார் ஓடிவந்து பார்த்தபோது, ஆடுகள் இருந்த இடத்தில் இருந்து சிறுத்தை ஒன்று ஓடியுள்ளது. கிடையில் சென்று பார்த்தபோது, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியதில் இறந்து கிடந்தன. மேலும், 2 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து ஜெயக்குமார் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
ஜெயக்குமார் கூறுகையில், "ஏற்கெனவே 3 ஆடுகளை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றுவிட்டது. ரத்த ருசி பார்த்த சிறுத்தை மீண்டும் அதே இடத்துக்கு வந்து 2 ஆடுகளைக் கொன்றுவிட்டது. இதனால் 5 கி.மீ. தள்ளி வந்து ஊருக்கு அருகில் தற்போது ஆடுகளை அடைத்து வைத்திருக் கிறேன். அந்த சிறுத்தை தொடர்ந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கன்றுக்குட்டியை விரட்டியுள்ளது. அருகில் இருந்தவர்கள் அதனை காப்பாற்றி விட்டனர். எனவே, சிறுத்தையை வனத்துக்குள் விரட்டுவதுடன், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.
இப்புகாரின் பேரில், தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதிக்கு தனியே யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.