மதுரை: அமைச்சர் மூர்த்திக்கு பயந்து தொகுதி மாறி போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
”மதுரை மேற்கு தொகுதியில் மூர்த்தி மட்டுமல்ல பிரம்மா வந்தாலும், வெற்றி பெற முடியாது. இது அதிமுக கோட்டைதான்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கெ.ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமான் பகுதியில் அமைந்திருக்கும் சமுதாயக் கூடம் அருகே பேவர் பிளாக் பதிப்பதற்கான பூமி பூஜையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மக்கள் எப்போதும் அதிமுக-திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையைத் தான் விரும்புவார்கள். முன்பு கருணாநிதியா ? ஜெயலலிதாவா ? என்று பார்த்தார்கள். இப்போது ஸ்டாலினா ? கே.பழனிசாமியா ? என்று தான் பார்ப்பார்கள். அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக உள்ளனர்.
2026 தேர்தலில் திமுக குடும்பத்தை தவிர மற்ற யாரும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மதுரை மேற்கு தொகுதியில் மூர்த்தி மட்டுமல்ல பிரம்மா வந்தாலும் வெற்றி பெற முடியாது. இது அதிமுக கோட்டைதான். நான் மக்களை சந்திப்பவன் அல்ல, மக்களோடு மக்களாக இருப்பவன்” என்றார்.