எழும்பூர் - கடற்கரை 4-வது பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி: பாதுகாப்பு ஆணையர் மார்ச் 9-ம் தேதி வருகை


சென்னை எழும்பூர் - கடற்கரை இடையேயான 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், அந்த பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் உயரதிகாரிகள் நேற்று ஆய்வு கொண்டனர். அதிவேக சோதனை ஓட்டத்தையும் மேற்கொண்டனர். | படம்: ம.பிரபு |

சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இப்பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர்.

இச்சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி வரும் 9-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள வருகிறார்.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4 கி.மீ. தொலைவுக்கு 4-வது பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பணியை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, தேவையான நிலத்தை பெற்று, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

குறிப்பாக ரயில் தண்டவாளம், சிக்னல் அமைப்பு மற்றும் மின்சாதனங்கள் நிறுவுதல் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றன. அண்மையில், இப்பாதையில் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன.

இந்நிலையில், கடற்கரை - சென்னை எழும்பூர் வரை 4-வது பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு கொண்டனர். தொடர்ந்து, இப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இறுதியில் இந்த ஆய்வு திருப்திகரமாக இருந்ததாகவும், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் கூறுகையில், ``இந்த ரயில் தண்டவாளத்தால், பல ரயில்களை இயக்க முடியும். விரைவில், இப்பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து கடற்கரை வழியாக வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் இப்பாதையில் அதிக அளவில் இயக்கப்படும்'' என்றார்.

விரைவில் பயன்​பாட்​டுக்கு வரும்: தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி வரும் 9-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள சென்னைக்கு வரவுள்ளார். அவர் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமெனில் தெரிவிப்பார்.

அதை சரிசெய்த பிறகு ஒப்புதல் கொடுப்பார். இதையடுத்து, இப்பாதையில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் இப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

x