[X] Close

அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் ‘ஐ.டி’ நாகலெட்சுமி


government-school-students-exam-fear-exam-preparations

மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கும் ஐ.டி பொறியாளர் நாகலெட்சுமி

  • kamadenu
  • Posted: 21 Mar, 2018 11:38 am
  • அ+ அ-

அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த ஐ.டி பொறியாளர் ஸ்ருதி என்கிற நாகலெட்சுமி.

மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கைக்கு அனுமதி கிடைப்பதால், நகர்ப்புறங்களைச் சேர்ந்த பலர் தங்களது குழந்தைகளை 8-ம் வகுப்பில் இருந்தே பொதுத்தேர்வுடன் சேர்த்து, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்த தொடங்கி விட்டனர். சில தனியார் பள்ளிகளில் இதற்கென சிறப்பு பயிற்சி வகுப்புகள் அதற்கான தனி கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன.

ஆனால், கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற வசதிகளும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எனவே, நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற அவர்கள் கடும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சூழலில், தனது செயல்பாடுகள் குறித்து கூறுகிறார் நாகலெட்சுமி:

பி.இ படித்துள்ள நான், சென்னையிலுள்ள பிரபல ஐ.டி கம்பெனியில் சாஃப்ட்வேர் டெவலப்பராக நல்ல ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறேன். பள்ளிப் பருவத்தில் இருந்தே, பேச்சுக்கலையில் எனக்கு மிகவும் ஆர்வம். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளேன். அந்த ஆர்வம் என்னை, தன்னம்பிக்கை பேச்சாளராகவும், மனிதவள பயிற்றுநராகவும் உயர்த்தியது.

ஐ.டி துறையில் பணிபுரிந்தபோதிலும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் அழைப்பின்பேரில் அவர்களின் ஊழியர்களுக்கும், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். இதற்காக, ஒரு மணி நேரத்துக்கு என கணக்கிட்டு கணிசமான தொகை எனக்கு வழங்கப்படுவது உண்டு.

அப்படிச் செல்லும்போது தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தேர்வு குறித்த அச்சமும், தயக்கமும் அதிகளவில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. மேலும் எதிர்காலம் குறித்த சிந்தனையும், லட்சியமும் அவர்களிடம் குறைவாக இருந்ததையும் உணர்ந்தேன். நானும் கிராமப்புறத்தில் இருந்து இந்த நிலைக்கு உயர்ந்தவள் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதுகுறித்து யோசித்தபோதுதான், வெளியிடங்களில் நாம் பணத்துக்காக அளிக்கக்கூடிய ஊக்குவிப்பு பயிற்சியை, அரசுப் பள்ளிகளில் பயிலும் நம் பிள்ளைகளுக்கு இலவசமாக கொடுத்தால் என்ன எனத் தோன்றியது. அதற்குப்பிறகு கடந்த 6 மாதங்களாக, பணிக்கு இடையே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருச்சிக்கு வந்து அரசுப் பள்ளிகளில் பயிற்சி அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

கல்வி முறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை. எனினும், அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துவிட்டால், அவர்களால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.

பொதுத்தேர்வுக்கு பயில்வோர் மட்டுமின்றி அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்களைச் சந்தித்து பேசுகிறேன். அப்போது மாணவர்களின் ஆளுமைத் திறன், அறிவு வளர்ச்சிக்கான வழிமுறைகள், கற்கும் திறனை மேம்படுத்தும் முறைகள், கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை எளிமையாகவும், புதுமையாகவும் எடுத்துக் கூறுகிறேன்.

மேலும் வகுப்பறையில் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது, எளிதில் புரியும் வகையில் தேவையான எடுத்துக்காட்டுகள் மற்றும் காரணங்களைக் கூறி பாடங்களை விளக்குவது, கலந்துரையாடல் மூலம் அவர்களின் கற்றல் திறனை சோதிப்பது போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன்.

ஐ.டி கம்பெனியில் கூடுதலாக விடுமுறை எடுத்துக் கொண்டு, தற்போது ஒவ்வொரு அரசுப் பள்ளியாகச் சென்று வருகிறேன். விடுமுறை எடுப்பதால் ஊதியம் குறையுமே என்பது குறித்து எனக்கு கவலையில்லை. என் பயிற்சி மற்றும் ஊக்குவிப்பு காரணமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒருசில மாணவர்களாவது உயர்ந்த நிலையை அடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த திருப்தியே எனக்கு போதுமானது என்கிறார் நாகலட்சுமி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close