சிவகங்கை: அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியத்தால் அறுவைசிகிச்சை நோயாளியின் கையில் இருந்த மருந்து செலுத்தும் மெல்லிய குழாயை முறையாக அகற்றவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
சிவகங்கை வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் ரஹீம் (55). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர், காலில் காயம் ஏற்பட்டு அழுகியது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த பிப்.19-ம் தேதி காலில் அழுகிய பகுதியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். அப்போது ரஹீமுக்கு மருந்து, குளுக்கோஸ் செலுத்த கையில் மருந்து செலுத்தும் மெல்லிய குழாயை (வென்ஃபிளான்) சொருகியிருந்தனர். பின்னர் அவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றார்.
ஆனால், அவரது கை வீக்கம் ஏற்பட்டு கடுமையான வலியிருந்தது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், மருந்து செலுத்தும் மெல்லிய குழாயின் சிறுபகுதி கைக்குள்ளே இருந்ததால், வீக்கம் ஏற்பட்டு வலித்ததாகவும், தற்போது அதை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியதாகவும்’ புகார் தெரித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ ஊழியர்களின் அலட்சியதால் மருந்து செலுத்தும் மெல்லிய குழாயை எடுத்தபோது அதன் சிறுபகுதி உடைந்துள்ளது. அதை அவர்கள் கவனிக்காமல் விட்டதால் எனக்கு கடுமையான வலி ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியதும், அவசர, அவசரமாக அறுவைசிகிச்சை செய்து கைக்குள் இருந்த மருந்து செலுத்தும் மெல்லிய குழாயின் சிறுபகுதியை அகற்றிவிட்டனர். தவிர, எனக்கு சர்க்கரை நோய்க்கான மருந்தையும் தராமல் அலைக்கழித்தனர்’ என்றார்.
இது குறித்து மருத்துவமனையில் கேட்டபோது, ‘ கையில் மருந்து செலுத்தும் மெல்லிய குழாயை சொருகிய இடத்தில் ரத்தம் உறைந்து கட்டியாகி விட்டது. அதைத்தான் அகற்றினோம்’ என்றனர். இது குறித்து கேட்டபதற்காக மருத்துவக் கல்லூரி டீன் சத்திய பாமாவை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.