மதுரை: மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய்களை கண்டறிய ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கள் வழங்கப்பட்டும், அதனை பயன்படுத்த தகுதியான மருத்துவர்கள், டெக்னீஷியன்கள் நியமிக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் அக்கருவிகள் முடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மதுரை மாநகராட்சியில் மட்டும் 33 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. மாநகராட்சி 100 வார்டுகளிலும் 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப் புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கள் வழங்கப்பட்டன. இவை, வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை ஆராய்வதற்கும், பெண்களுக்குக் கருப்பை அமைப்புகளை ஆய்வு செய்வதற்கும், பல்வேறு வகை நோய்களை அறியவும் உதவுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த ஸ்கேன் வசதி இல்லாததால், நடுத்தர, ஏழை மக்கள் தனியார் ஸ்கேன் மையங்களில் கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுக்கும் அவலம் உள்ளது. பண வசதியே முற்றிலும் இல்லாதவர்கள், கிராமங்களில் இருந்தும், தொலைதூரத்தில் இருந்தும் நகர் புறங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் செல்லும் நிலை உள்ளது.
கர்ப்பிணிகள், நோயாளிகள் அலைக்கழிப்பை தவிர்க்கவே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த ‘ஸ்கேன்’களை இயக்குவதற்கான டெக்னீஷியன்களையும், தகுதியான மருத்துவர்களையும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கவில்லை. அதனால், இந்த ஸ்கேன்கள், கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் முடங்கிப்போய் உள்ளன.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ”அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனை இயக்க டெக்னீசியன்களும், ஸ்கேன் ரிப்போர்ட் வழங்க ரேடியா லஜிஸ்ட் மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். ஆனால், மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமில்லாது கிராமப் புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த ஸ்கேன்களை இயக்கவும், நோயாளிகளுக்கு நோய்களை கண்டறியவும் ஊழியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை.
ரேடியாலஜிஸ்ட் மருத்துவர்களை நியமிக்க சாத்தியமில்லை என்பதால், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரியும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலமே ஸ்கேன் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால், பெரும்பாலும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் சிறிது காலத்திலே பட்ட மேற்படிப்பு (PG) படிக்க ‘சீட்’ கிடைத்து சென்று விடுகிறார்கள். இதனால் எம்பிபிஎஸ் படித்த அரசு மருத்துவர்கள் ஸ்கேன் பயிற்சி கொடுக்கும் திட்டமும் கைவிடப்பட்டது. தற்போது எந்த திட்டமும், பயிற்சியும் இல்லாமல் ஸ்கேன் பயன்பாடு இல்லாமல் இருப்பது உண்மைதான்” என்றனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”மாநகராட்சியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஸ்கேன் எடுக்கப்படா விட்டாலும், கீழமாசி வீதியில் உள்ள மாநகராட்சி ஸ்கேன் மையத்துக்கு அனுப்பி அங்கு ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் மூலம் இலவசமாக ஸ்கேன் பரிசோதனை செய்து கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சிகிச்சை வழங்கப்படுகிறது. அதுபோல், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கர்ப்பிணிகளை அனுப்பி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனாலும், நகர்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே ஸ்கேன்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நோயாளிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்” என்றார்.