வீராணம் ஏரி ஆழப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்: சட்டப்பேரவை குழு தகவல்


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் அக்குழுவின் தலைவர் நந்தகுமார் எம்எல்ஏ தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் குழு உறுப்பினர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் செங்கம் மு.பெ.கிரி, காட்டுமன்னார்கோவில் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வின் போது கடலூர் மக்களவை உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடலூர் கோ.ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, குழுவின் தலைவர் நந்தகுமார் எம்எல்ஏ கூறுகையில், “நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சுரங்கம் 1 மற்றும் 1-ஏ-ல் வனவியல் பிரிவின் கீழ் காடு வளர்த்தலுடன் நெல், தேங்காய், வாழை, மா, சப்போட்டா, கொய்யா, காய் கறிகள், தேக்கு போன்றவை பயிரிடப்படுவதைப் பார்வையிட்டோம். இயற்கை பூஞ்சோலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தில் மக்களின் வருகைப் பதிவேடு, பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தோம். உள்ளுர் மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தோம். வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிகப்படியான தண்ணீர் தேங்க வழிவகை செய்ய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும்.

கடலூர் சிப்காட் தொழில்துறை வளாகம் கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், செல்லாங்குப்பம் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.15.75 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டுள்ள பெட்ரோல் பங்கின் செயல்பாடுகளை ஆய்வு செய்தோம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் கடலூர் வட்ட செயல் முறை கிடங்கும் ஆய்வு செய்யப்பட்டது. செம்மண்டலம் பகுதியில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ரூ.5 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 100 கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. அதையும் ஆய்வு செய்தோம் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய கோட்டப் பொறியாளர் கெஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x