புதுச்சேரி: கண் பார்வை குறைபாடுகளை இயற்கையான முறையில் சரிசெய்யும் நோக்கத்துடன் 'ஆரோ பெர்ஃபெக்ட் விஷன்' என்ற புதிய திட்டம், அரவிந்தர் ஆசிரமத்துடன் இணைந்து ஆரோவில்லில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆரோவில் பாரத் நிவாஸில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி ரவி, அரவிந்தர் ஆசிரமம் சந்தோஷே, மங்கள்தா ஆகியோர் முன்னிலையில் ஆரோவில்லில் நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாரத் நிவாஸ் தரப்பில் ஜன்மஜய் பங்கேற்றார்.
ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி ரவி இத்திட்டம் பற்றி கூறுகையில், "இந்த திட்டம் ஆரோவில் வாசிகள், இப்பகுதி மக்கள் மற்றும் ஆரோவில்லுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இது மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கும். கண் பார்வை குறைபாடுகளை இயற்கையாக சரி செய்ய இத்திட்டம் உதவும்" என்று தெரிவித்தார்.
திட்டத்தின் அம்சங்கள் தொடர்பாக ஆரோவில் ஆரோக்யா நல மையத்தை நடத்தி வரும் வெங்கடேசன் கூறுகையில், "கண் பார்வை குறைபாடு களைத் தடுக்க மற்றும் சரி செய்ய ‘ஐ யோகா’ எனப்படும் கண் பயிற்சிகள் (Eye Exercises), கண் மசாஜ் (Eye Massage), கண் பயிற்சி சிகிச்சை முறை (Eye Therapy) போன்ற பல்வேறு பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும்.
முக்கியமாக, கிட்டப்பார்வை போன்ற கண் பிரச்சினைகளை இயற்கையாக சரிசெய்ய இந்த முறைகள் பயனுள்ளதாக இருக்கும். நவீன காலத்தில் கணினி மற்றும் மொபைல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், குழந்தைகளிடையே கண் பார்வை குறைபாடுகள் அதிகரிக்கின்றன. இதைத் தடுக்க, இந்த திட்டம் முக்கியமான ஒரு நடவடிக்கையாக அமைகிறது.
'ஆரோ பெர்ஃபெக்ட் விஷன்' திட்டம், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் கண் பார்வையை இயற்கையாக மேம்படுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றனர். கண் பார்வை குறைபாடுகளைத் தடுக்கவும், சரிசெய்யவும் இது ஒரு மாற்றாக அமையும்" என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தில் தற்போது சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் உள்ளூரில் வசிப்போர் ஏழ்மை நிலையில் இருந்தால் இலவசமாக தரவும் திட்டமிட்டுள்ளோம். மக்களிடம் வரவேற்பை பொருத்து ஆரோவில் அறக்கட்டளை அடுத்தக் கட்டமாக முழு இலவசமாக தரவும் முடிவு எடுப்பார்கள் என்று ஆரோவில் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.