ஊட்டி, கொடைக்கானலின் பசுமையை பாதுகாக்க கண்ணாடி, மின்சார பேருந்துகளை இயக்கினால் என்ன?


சென்னை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களின் பசுமை சூழலைப் பாதுகாக்க கண்ணாடி மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கினால் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும், இ-பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க கூடுதலாக சுய உதவிக்குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிப்ரவரி மாத புள்ளி விவரப்படி விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சாதாரண நாட்களில் 3 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில் ஐஐடி மற்றும் ஐஐஎம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை தற்காலிகமாக குறைந்தபட்சமாக எத்தனை சுற்றுலா வாகனங்களை ஊட்டி, கொடைக் கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் அனுமதிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம அளிக்க வேண்டும், எனக் கூறி விசாரணையை மார்ச் 13-க்கு தள்ளி வைத்தனர். மேலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான சுற்றுலா அனுபவத்தை வழங்கும் வகையில் மலை அடிவாரத்திலேயே சுற்றுலா வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பயணிகளை மின்சாரப் பேருந்து மற்றும் கண்ணாடி பேருந்துகளில் அழைத்துச் சென்றால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை தத்ரூபமாக ரசிக்க முடியும்.

அத்துடன் பசுமை சூழலையும் வெகுவாக பாதுகாக்க முடியும். மலைப்பகுதிகளில் நடைபெறும் விபத்துகளையும் தவிர்க்க முடியும். இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மின்சார மற்றும் கண்ணாடிப் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.

x