நாமக்கல்: கொல்லிமலை அருகே குளிர்பானம் அருந்திய இளைஞர் உயிரிழந்தார். சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே சித்தூர் நாடு ஊராட்சி படக்கிராய் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (42). இவரது மகன் பிரதீப் (10). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (23) என்பவர் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த குளிர்பானத்தை பிரதீப் மற்றும் பழனிசாமியும் அருந்தினர்.
சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். உறவினர்கள் இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்த வழியில் பழனிசாமி உயிரிழந்தார். பிரதீப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வாழவந்திநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.