நாமக்கல்: நாமகிரி தாயார், லட்சுமி நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா 100 ஆண்டுகளுக்குப் பின்னர் கமலாலயக் குளத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் உள்ள மலைக்கோட்டையின் அடிவாரத்தில் புராண கால சிறப்பு பெற்ற கமலாலயக் குளம் உள்ளது. இக்குளத்தின் ஆஞ்ச நேயர் நீராடியதாகப் புராண வரலாறு கூறுகிறது. இதற்குச் சாட்சியாக குளத்தில் ஒரு பகுதியில் ஆஞ்சநேயர் பாதம் உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் குறையும் நேரங்களில் ஆஞ்சநேயர் பாதத்துக்குப் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். மேலும், மலையின் அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர், நாமகிரி தாயார் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு எதிரில் ஆஞ்ச நேயர் கோயிலில் உள்ளது. நரசிம்மன் கோயில் தெப்பத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 100 ஆண்டாகத் தெப்பத் திருவிழா தடைப்பட்டது. தற்போது, தெப்பத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் கலந்து கொண்டார். பின்னர் கமலாலய குளத்தையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் எம்பி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கோயில்களில் திருப்பணிகள் நடத்தவும், தடைப்பட்ட திருவிழாக்களை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுப் புராண கால சிறப்பு மிக்க நாமக்கல் நாமகிரி தயார், லட்சுமி நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு கமலாலய குளத்தில் தெப்பத்தேர் திருவிழா நடத்த முடிவு செய்து,
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். தெப்பத் தேரில் லட்சுமி நரசிம்மர், நாமகிரி தாயார், ரங்க நாதர், ரங்க நாயகி, ஆஞ்ச நேயர் ஆகியோர் எழுந்தருளி தெப்பத்தில் பவனி வர உள்ளனர். திருவிழாவில், நாமக்கல் மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இவ்வாறு அவர் கூறினர். ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.