ராஜபாளையம் அதிர்ச்சி: 24 ஆண்டுகளாய் திறப்பு விழா காணாமலேயே இடிக்கப்படும் சமுதாயக் கூடம்!


விருதுநகர்: ராஜபாளையம் அருகே நரிக்குளத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு விழா காணாத நிலையில், இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டதை கண்டித்து, பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே வடகரை ஊராட்சியில், கடந்த 2001-ம் ஆண்டு சிவகாசி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டபோது, பொடா சட்டத்தில் கைதாகி வைகோ சிறையில் இருந்ததால், அவர் வந்த பின்னர்தான் சமுதாயக் கூடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், சமுதாயக் கூடம் திறக்கப்படவில்லை.

இந்த சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 24 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால் சிதிலம் அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சமுதாயக் கூடத்தை சீரமைக்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நரிக்குளத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை இடிக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சமுதாயக்கூடத்தை இடிக்காமல் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 350 குடும்பங்கள் வசிக்கும் நரிக்குளம் கிராமத்தில் சமுதாயக் கூடத்தை இடித்து விட்டால், மீண்டும் கட்டித்தர வாய்ப்பில்லை. அதனால், இந்த சமுதாயக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து உள்ளோம். அதிகாரிகள் திங்கள் கிழமை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். அதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

x