ஆம்பூரில் உள்ள நாம மலையில் முருகர் வேல் சேதம் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


திருப்பத்தூர்: ஆம்பூரில் உள்ள நாம மலை மீது இருந்த முருகர் வேலை சேதப்படுத்தியவர்கள் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் நாம மலை உள்ளது. இந்த நாம மலை மீது முருகர் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதைப் பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாம மலைக்கு வழிபாடு நடத்தப் பொதுமக்கள் சென்ற போது அங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த வேல் சேதப்படுத்தப் பட்டிருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், நகரக் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்ட தலைவர் வாசு தேவன், முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் சுதாகர் உள்ளிட்டோர் அங்குச் சென்று சேதப்படுத்தப்பட்ட முருகன் வேலை பார்வையிட்டனர்.

இதையடுத்து, வேலை சேதப்படுத்திய நபரைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் துறை ஆய்வாளரிடம் பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x