பொம்மிடி ரயில் நிலையம் ரூ.16 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள பழமை வாய்ந்த ரயில் நிலையம் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
1867-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பொம்மிடி ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. அருகில் உள்ள ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து காபி கொட்டை, மிளகு, விலை உயர்ந்த மரங்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்டவற்றை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பொம்மிடி ரயில்நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
பொம்மிடியில் இருந்து நாள்தோறும் சேலம், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவியர், மருத்துவ வசதிக்காக செல்லும் நோயாளிகள், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், வணிகர்கள்,கேரளாவுக்கு காய்கறிகளை கொண்டு செல்லும் வணிகர்கள், திருப்பதி செல்லும் பக்தர்கள் பொம்மிடி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பிரம்மாண்டமான நுழைவாயில், 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த வசதி, விசாலமான இருசக்கர வாகன நிறுத்துமிடம், குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் காத்திருப்பறைகள், ரயில்கள் விவரம் குறித்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை, புதுப்பொலிவுடன் நடைமேடை, மேற்கூரை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா, பிளாட்பாரத்தை கடக்க லிஃப்ட் வசதி, மின்விளக்குகள் போன்ற வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.
திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள ரயில் நிலையம் குறித்து தென்னக ரயில் பயணிகள் நல சங்க தலைவர் காமராஜ், செயலாளர் அறிவழகன் ஆகியோர் கூறியதாவது: பொம்மிடி ரயில் நிலையத்தை புனரமைக்க நிதி ஒதுக்கிய பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோருக்கும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கவுன்ட்டர் கட்டிடத்தை பழமை மாறாமல் மாற்றி அமைக்க ஆவண செய்த சேலம் கோட்ட மேலாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நீண்ட நாள் கோரிக்கையான கூடுதல் ரயில்களை பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் கூடுதலாக இணைக்கவும், புற காவல் நிலையம் ஏற்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.