செங்கோட்டை - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் 23 பெட்டிகளுடன் ஜூன் வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜபாளையம் பயணச்சீட்டு முன்பதிவு பொது ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூா் - செங்கோட்டை இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், எழும்பூர் ரயில் நிலைய கட்டுமானப் பணி காரணமாக கடந்த நவம்பர் முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் நவம்பர் முதல் 1 இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி, 2 மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டி, 1 முன்பதிவில்லாத பெட்டி என 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
முதலில் ஜனவரி வரை மட்டுமே 23 பெட்டிகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டு, பின் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜூன் 19 வரை சிலம்பு எக்ஸ்பிரஸ் 23 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டபோது, பயணச் சீட்டு முன்பதிவில் திருத்தங்கல் ரயில் நிலையம் வரை, பொது ஒதுக்கீடு பிரிவில் இருந்தது. அதன்பின் சங்கரன்கோவில் வரை மட்டுமே பொது ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது.
இதனால் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், பொது ஒதுக்கீட்டுக்கு மாற்றக் கோரி ராஜபாளையம் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையம் பயண சீட்டு முன்பதிவில் பொது ஒதுக்கீடு பிரிவிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொத்த முன்பதிவு இருக்கையில் 65 சதவீதம் பொது ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.