புதுச்சேரி: நானே அனுமதி கொடுக்கும்போது, நிர்வாகத்தில் ஏன் குறையிருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை என முதல்வர் ரங்கசாமி கவலை தெரிவித்தார்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு காமராஜர் மணிமண்டபத்தில் புதுச்சேரி அரசு, சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பில் மாபெரும் சுகாதாரத் திருவிழா நடந்தது. இதன் தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: இந்தியாவில் மருத்துவக் குறியீட்டில் நாம் முதன்மை நிலையில் இருக்கிறோம். மக்கள் விரும்பும் வகையில் சித்தா, ஆயூர்வேத மருத்துவமனைகள் உள்ளன. நல்ல சுகாதார வசதிகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் இது அதிகமாக இருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். புதுச்சேரியில் சிறப்பு மருத்து வசதி கிடைக்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
தெருக்கள் சுகாதாரமாகவும், கொசுத்தொல்லை இல்லாமலும் இருக்க எல்லா துறைகளும் இணைந்து செயல்படுவது அவசியம். காரைக்காலில் மருத்துவ வசதி சரியாக கிடைக்கவில்லை என்று பெரிய குறையாக சொல்வார்கள். அங்கு ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. எல்லா வசதியும் கொண்ட புதிய பொது மருத்துவமனை கொண்டு வர அரசு திட்டமிட்டு இருக்கிறது. நிர்வாகத்தில் பெரிய குறை உள்ளது. சில சங்கடங்கள் இருக்கின்றன.
அதனை வெளிப்படையாக தான் சொல்கிறேன். துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். கோப்பு சுற்றி வருகிறது என்ற கதையை சொல்லும் வேலையே இருக்கக்கூடாது. கோப்புகளில் போடப்படும் சில கேள்விகளை போடாமல், விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதில் இன்னும் வேகம் காட்ட வேண்டும். இப்படி செய்தால் நம்மை யாரும் எந்த குறையும் சொல்லும் வாய்ப்பு இருக்காது.
இந்த குறைகளை முதல்வராகவும், துறையின் அமைச்சராகவும் இருந்து சொல்கிறேன் என்றால், எனக்கு எவ்வளவு சங்கடங்கள் இருக்கும். சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். முதல்வரான நானே அனுமதி கொடுக்கும்போது நிர்வாகத்தில் ஏன் பெரிய குறையிருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை.
பலவற்றை நாம் செய்து வருகிறோம். குறைகளும் நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் நாம் அதிகமாக செய்கிறோம். இவையெல்லாம் இருந்தாலும் நீங்கள் (சுகாதாரத் துறையினர்) கவலையின்றி பணிகளை தொடர்ந்து செய்து மக்களின் பாராட்டை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.