தஞ்சை: ஒரத்தநாட்டில் உள்ள தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சுகுமாறன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ஒரத்தநாடில் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கோயில் வழிபாட்டுத் தலம், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, பேருந்து நிறுத்தம், வங்கி ஆகியவற்றின் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. இங்கு மது வாங்குவோர் போதையில் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையூறு அளித்து வருகின்றனர். பொதுமக்களை ஆபாசமாக பேசி வருகின்றனர். போதையில் சாலையில் ஆங்காங்கே மயங்கி விழுந்து கிடக்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி விசாரித்தனர். மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற தஞ்சை மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார். இருப்பினும் தற்போது வரை கடை மாற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மதுபானக் கடையை வேறு இடத்தக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் இதுவரை இடமாற்றம் செய்யப்படாதது ஏன்? உடனடியாக மதுபான கடையை மூட வேண்டும் என உத்தரவிட்டனர்.