தனியார் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து செவிலியர் உயிரிழப்பு: சிவகங்கையில் சோகம்


சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அருகே தனியார் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் செவிலியர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிபவர் பெரியண்ணன் (45). அங்கு கீழசிலாமேக நாட்டைச் சேர்ந்த மாலா (45) செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு நோயாளி ஒருவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, தேவகோட்டைக்கு ஆம்புலன்சில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் நாட்டரசன்கோட்டை அருகே கண்டனிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே செவிலியர் மாலா உயிரிழந்தார். படுகாயமடைந்த ஓட்டுநர் பெரியண்ணனை அப்பகுதியிலிருந்தோர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

x