சுவாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: திருவண்ணாமலையில் பரிதாபம்


கிஷோர்

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அங்காளம்மன் கோயில் சுவாமி உற்சவத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, அம்மன் வீதியுலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா தொடங்கியது. திருவள்ளுவர் தெருவில் சுவாமி உற்சவம் சென்றபோது, சாலையோரத்தில் மினி லாரி நிறுத்தப்பட்டதால், ஒதுங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது மின்மாற்றியில் சுவாமி உற்சவ வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த அலங்கார பதாகை உரசியதால் மின்சாரம் தாக்கியது.

அப்போது சுவாமி உற்சவ வாகனத்தில் இருந்த சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிஷோர் (22) மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞரை காப்பாற்ற முயன்ற, அவரது தந்தை சேகர் மற்றும் சுரேஷ், பாபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மூவரும், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் உயர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், சுவாமி உற்சவம் தடைபட்டது. இது குறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x