நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கான எந்த பணிகளும் செய்யப்படவில்லை என்று தெரிவித்து திமுக கவுன்சிலர் வெளி நடப்பு செய்தார். 2 மணி நேரம் கூட தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கப் போவதாக கூறி மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பதாக மதிமுக கவுன்சிலர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார். இச்சம்பவங்களால் திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே. ராஜு, ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசும்போது, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் வடக்கு சாலைக்கு தமிழ் ஆய்வாளர் தொ. பரமசிவம் பெயரை சூட்டுவது குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார். திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடை உடைப்பெடுத்து தெருக்களிலும், சாலைகளிலும் கழிவுநீர் தேங்குவது குறித்து கவுன்சிலர்கள் பலரும் பிரச்சினையை எழுப்பினர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பாதாள சாக்கடை உடைப்புகளை சீர் செய்யாத ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேயர் பதில் அளித்தார். மாநகராட்சி 48-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆமினா பீவி பேசும்போது, ‘‘முதல்வர் நல்ல பல திட்டங்களை தமிழகம் முழுவதும் செய்து வரும் சூழலில் மாநகர பகுதிகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. சாலைகள் சரியில்லை, குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க மனுவாக அளித்தும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டத்தில் பேசும்போது செய்து கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு எந்த பணியையும் அதிகாரிகள் செய்வதில்லை. 3 மேயர்கள், 3 ஆணையர்கள் மாறியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்று தெரிவித்து கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
மாநகராட்சி 41- வது வார்டு மதிமுக கவுன்சிலர் சங்கீதா மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பதாகையை ஏந்தி கோஷமிட்டார். மேயர், ஆணையர், துணைமேயர் இருக்கைகளுக்கு சென்று கோரிக்கை மனுவை அளித்தார். மாநகர மக்களுக்கு தினமும் 2 மணி நேரம் குடிநீர் வழங்க முடியாத மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்போவதாக சாத்தியமில்லாத திட்டத்தை அறிவித்து மக்கள் பணத்ம் ரூ.28 கோடியை வீணடிக்கிறது என்று அவர் குற்றஞ் சாட்டினார். பதாகையுடன் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
திருநெல்வேலி மண்டல தலைவர் மகேஸ்வரி பேசும்போது, ‘‘எங்களுடைய மண்டலத்தில் போதிய துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வருவதில்லை. போதிய குப்பை அள்ளும் வாகனங்களும் இல்லை. இதனால் குப்பை மலை போல் தேங்கி கிடக்கிறது. ராம் அண்ட் கோ நிறுவனம் சார்பில் எங்கள் மண்டலத்துக்கு எத்தனை பணியாளர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள்?, ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அவருடைய கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்லாமல் மவுனம் காத்தனர். இதனால் கோபமடைந்த ஆணையர், ‘‘எத்தனை துப்புரவு பணியாளர்கள் உள்ளனர் ?, எத்தனை குப்பை அள்ளும் வாகனங்கள் இருக்கிறது என்ற விவரம் கூட உங்களுக்கு தெரியவில்லையா?, இப்படி அதிகாரிகள் இருந்தால் பணிபுரிவது மிகவும் சிரமம்’’ என்று கடிந்து கொண்டார்.
12- வது வார்டு கவுன்சிலர் சங்கர் பேசும்போது, திட்டப் பணிகளுக்கான கோப்புகள் 4 முறை காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட ஆணையர், ‘‘கோப்புகள் காணாமல் போவது என்பது மிகப்பெரிய குற்ற செயல். இதுகுறித்து புகார்கள் அளித்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி தெரிவித்தார்.
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, தங்கள் பகுதிகளில் யாரும் இருந்தால் அது தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என்று ஆணையர் தெரிவித்தார்.
எலிகளால் சாலை சேதம்: பேட்டை பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலைகள் எலிகளால் சேதம் அடைந்து வருவதாக 20-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷேக் மன்சூர் பேசியபோது, எலியை பிடிப்பதற்கு ஆளை வர சொல்கிறேன் மேயர் கிண்டலாக பதில் தெரிவித்தார். அதற்கு முதலில் தெருநாய்களை பிடியுங்கள், பின்னர் எலியை பிடிக்கலாம் என்று கவுன்சிலர் பதில் அளித்தார்.