கரூர் கோயில் நிலத்தில் விவசாய கல்லூரி அமைப்பதை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு


கரூர்: கோயில் நிலத்தில் விவசாய கல்லூரி கட்டுவதற்கு எதிரான வழக்கில் கோவை வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பிரபு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரியை குளித்தலை இனுங்கூர் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 205 ஏக்கர் இடத்தில் அமைக்கக் கோரி விவசாயிகள் சார்பில் 2021-ல் அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வேளாண் கல்லூரி அமைக்க மணவாசி கிராமத்தில் மத்தியபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வறட்சியான பகுதியாகும். இங்கு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்தால் அரசுக்குத் தான் இழப்பு ஏற்படும். இனுங்கூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் செலவில்லாமல் வேளாண் கல்லூரி அமைக்கலாம். வருங்காலங்களில் வேளாண் சார்ந்த விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிலமும் போதுமான அளவு உள்ளது. சுற்றிலும் விவசாயம் நடைபெற்று வருவதால் வேளாண் மாணவர்கள் பயிற்சி பெற சுலபமாக இருக்கும்.

எனவே கரூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க கோயில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து, இனுங்கூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கரூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக கோவை வேளாண் பல்கலைக் கழக பதிவாளர், கரூர் மாவட்ட ஆட்சியர், நில நிர்வாகத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

x