விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு தராத விவகாரம்: திருச்சி அரசு பேருந்து ஜப்தி


திருச்சி: விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருச்சி காட்டூர் எல்லைக்குடி கைலாஷ் நகர் அண்ணா சாலையை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், கடந்த 2019 ஆண்டு மார்ச் 23ம் தேதி அன்று மகள் சினேகா (17). மகன் லிங்கேஸ்வரன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, டிவிஎஸ் டோல் கேட் பகுதியில் அரசுப் பேருந்து மோதியது. இதில் சிறுமி சினேகா உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட சிறப்பு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் உரிமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.13.09 லட்சம் இழப்பீடடு வழங்க 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி அன்று உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்கு வரத்துக் கழக நிர்வாகம் இழப்பீடு தராமல் காலம் தாழ்த்தியதால், மாவட்ட சிறப்பு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் உரிமை நீதிமன்றத்தில் யோகேஸ்வரன் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

x