உரிமம் பெறாமல் வீடுகளில் நாய் வளர்த்தால் அபராதம்: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அறிவிப்பு


புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறைபடுத்துவதற்கு. மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் பிரதி புதன்கிழமை தோறும் காலை 9.30 மணி முதல் 11.30 வரை வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 109 வளர்ப்பு நாய்களுக்கு வெறி நாய்கடி தடுப்பூசி இலவசமாக செலுத்தி, பொது பரி சோதனை செய்து புதிய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உரிமத்துக்கு நாய் ஒன்றுக்கு ரூ.150 மற்றும் புதுப்பித்தலுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் ஆதார், புகைப்படம் மற்றும் நாயின் புகைப்படம், வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி ஏற்கெனவே செலுத்தியதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உரிமம் பெறாமல் நாய்கள் வீடுகளில் வளர்ப்பது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் வியாபார நோக்கம் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை நாய்கள் நோய் வாய்ப்பட்டு, வயது முதிர்ந்த பின்பு சரியான முறையில் பராமரிக்காமல் பொது இடங்களில் கைவிடப்படுவதாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி இது குற்றமாகும். எனவே வியாபார நோக்கம் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் வெளி நாட்டு வகை நாய்களின் உரிமையாளர்கள் அவை வயது முதிர்வு, நோய் வாய்பட்டால் அவற்றை கைவிடாமல் உடனடியாக கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையுடன் சிகிச்சை அளித்து முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு முறையாக பராமரிக்காதவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 73583 91404 என்ற வாட்ஸஅப் எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x