புதிதாக வாங்கப்பட்ட மோப்ப நாய்க்குட்டி: அதியன் என பெயர் சூட்டிய தருமபுரி எஸ்.பி!


தருமபுரி: மாவட்ட காவல்துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட மோப்ப நாய் குட்டிக்கு காவல் கண்காணிப்பாளர் பெயர் சூட்டினார்.

போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று வீதம் போதைப் பொருள் தடுப்பு மோப்ப நாய் வழங்க தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு கோயமுத்தூரில் இருந்து மோப்ப நாய் குட்டி ஒன்று புதிதாக கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த நாய்க் குட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பார்வையிட்டு, அதற்கு ‘அதியன்’ என பெயர் சூட்டினார். இந்த நாய்க் குட்டிக்கு மோப்பத்தின் மூலம் போதைப் பொருட்களை கண்டறிவது தொடர்பான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளன. முழுமையான பயிற்சிக்கு பின்னர் இந்த நாய் போதைப் பொருட்களை கண்டறியும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

x