திண்டுக்கல்: பழநி, ஒட்டன்சத்திரத்தில் தண்ணீருக்காக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனப் பகுதியில் இருக்கும் குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர்.
பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், காட்டுப் பன்றி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள், காட்டாறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
கோடை காலத்தில் விலங்குகள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு வரும் போது தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதை தடுக்கவும், விலங்குகளின் தாகம் தணிக்கவும் வனத்துறை சார்பில் பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் நேற்று முதல் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப் பகுதியில் இன்னும் வறட்சி ஏற்படவில்லை. விலங்குகளுக்கு தேவையான குடிநீர் வனப் பகுதியிலேயே கிடைக்கிறது. எனினும், முன்னெச்சரிக்கையாக குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியை தொடங்கியுள்ளோம். இதனால் விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியே வருவது குறையும். கோடை காலம் முடியும் வரை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும். கூடுதலாக சோலார் பம்ப் வசதியுடன் இயங்கும் புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினர்.