சிவகங்கை: பொன்னாகுளம் ஊராட்சி கீழக்குளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அரசு பள்ளி கோயிலில் இயங்கி வருகிறது.
சிவகங்கை அருகே பொன்னாகுளம் ஊராட்சி கீழக்குளம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 16 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் பராமரிப்பின்றி பள்ளிக் கட்டிடம் சேதமடைந்தது. இதையடுத்து சில வாரங்களாக அருகேயுள்ள சிவசக்தி விநாயகர் கோயிலில் பள்ளி இயங்கி வருகிறது.
கோயில் அருகே குளம், சாலை உள்ளதால் ஆசிரியர்கள் கவனத்துடன் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். பக்தர்கள் கோயிலுக்கு வரும் போது கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. சத்துணவு மையத்தில் சமையல் செய்து உணவை கோயிலுக்கு கொண்டு வந்து மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.
பள்ளியை சீரமைத்து, வகுப்பறையை அங்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகை யில், ‘பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.