பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண்: திருச்சி ஆட்சியர் அறிவிப்பு


ஆட்சியர் மா.பிரதீப் குமார்

திருச்சி: மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரம், மாவட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதிகள், மறுவாழ்வு, ஆற்றுப் படுத்துதல், திறன் வளர்ப்பு மற்றும் தொழிற்கல்வி வழங்குவது குறித்து ஆட்சியர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்யேக செல்போன், வாட்ஸ் அப் எண் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்கள், உடல்நலன் குன்றியவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை பெறுபவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் 63691 83413 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

x