இந்தியாவில் ஆண்டுதோறும் காசநோயால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்


நெல்லை: இந்தியாவில் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர் என, திருநெல்வேலி மருத்துவ பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் வி.பி. துரை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களிடம் மாவட்ட காசநோய் மையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு திருநெல்வேலி மருத்துவ பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் வி.பி.துரை பரிசு வழங்கினார்.

அவர் பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். 4 லட்சம் பேர் காசநோயால் மரணம் அடைகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்துக்கும் அதிகமான காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 சதவீதம் பேர் வீரியமிக்க கூட்டு மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் பாதித்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காசநோய் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே பாதிக்கிறது. சர்க்கரை நோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், ஸ்டீராய்டு வகை மாத்திரைகளை அதிமாக உட்கொள்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் காசநோயினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, மாணவ, மாணவியர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நல்ல புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்க்கக் கூடாது. நன்றாக உறங்க வேண்டும். படுக்கையில் அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். காசநோயின் அறிகுறிகளான தொடர் இருமல், மாலை நேர காய்ச்சல், எடை குறைதல், பசியின்மை அறிகுறிகள் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பெலிஸியா கிளாடிஸ் தலைமை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வ பொன்மலர் முன்னிலை வகித்தார். மாவட்ட நலக்கல்வியாளர் மாரிமுத்து சாமி, சிகிச்சை மேற்பார்வையாளர் முத்துராஜா, சுகாதார பார்வையாளர் சுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x