கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வுப் பணியின்போது அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் குறைபாடு இருந்ததைத் தொடர்ந்து, ரேஷன் கடை விற்பனையாளரை ஆட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஓசூர் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நேற்று (26-ம் தேதி) ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள இலங்கைத் தமிழர் வாழ் குடியிருப்புகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். அப்போது, அங்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புனுகன்தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு வழங்கும் பணியை ஆய்வு செய்து, மதிய உணவைச் சாப்பிட்டு தரம் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கெலவரப்பள்ளி ஊராட்சி சென்னசந்திரம் ரேஷன் கடையில் ஆட்சியர் ஆய்வு செய்தபோது, அங்கு அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, விற்பனையாளர் அரவிந்த் என்பவரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, உதவி ஆட்சியர் பிரியங்கா, வட்டாட்சியர் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.